அப்பல்லோ வந்தார் ஆளுநர்: ஜெயலலிதாவை இன்றாவது பார்ப்பாரா?

சனி, 22 அக்டோபர் 2016 (11:49 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்திக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று இரண்டாவது முறையாக வந்துள்ளார்.


 
 
கடந்த 1-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து விட்டு முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க முடியாமல் திரும்பி சென்று விட்டார்.
 
அதன் பின்னர் முதல்வர் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் முதல்வரின் உடல் நிலைகுறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கியதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 
ஆனால் முதல்வரை சந்தித்ததாகவோ, அவரிடம் பேசியதாகவோ எந்த தகவலும் இல்லை. இது பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் பேசி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நிலைகுறித்து கேட்டறிந்ததாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. முதல்வர் பேசி வருவதால் இந்த முறையாவது ஆளுநர் முதல்வரை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்