எடப்பாடிக்கு அதிர்ச்சியளிக்க உள்ள ஆளுநர்: சிபிஐ விசாரணையை நோக்கி வாக்கி டாக்கி ஊழல்?
திங்கள், 9 அக்டோபர் 2017 (14:06 IST)
தமிழக காவல்துறையை நவீனமயமாக்க வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக இந்த ஊழல் தற்போது பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பொதுவாக வாக்கி டாக்கி வாங்குவதற்கான டெண்டர் ஒதுக்கும்போது பல நிறுவனங்கள் பங்கேற்கும். அதில், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடும் போது ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்படும். இதுதான் காலம் காலமாக உள்ள நடைமுறை.
ஆனால், 2017-2018-ஆம் ஆண்டுக்கான வாக்கி டாக்கி வாங்கும் ஒப்பந்த புள்ளி கோரலில் மோடோரோலோ சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. அதற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.
உண்மையில், அந்த திட்டத்திற்கு ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிக பட்சமாக ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, வெறும் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய விதிமீறலாகும்.
ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.4700 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியிருந்தார். ஒப்பந்த புள்ளி கோரலில் ஒரே ஒரு நிறுவனமே, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ள நிரஞ்சன் மார்டி, வாக்கி டாக்கியின் தொழில்நுட்ப மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை, வாக்கி டாக்கி வழங்கும் நிறுவனத்திற்கு அளித்த ஒப்பந்த ஏற்பு ஆணை, கொள்முதல் ஆணை ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஊழலை திமுக கையிலெடுத்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதன் பேரில் ஆளுநர் தலைமைச்செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து தமிழகத்தில் பாஜக நல்ல பெயரை எடுக்க ஆளுநரை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக புதிதாக வந்துள்ள ஆளுநர் வாக்கி டாக்கி ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என ஆளுநர் தலைமைச் செயலரிடம் கேட்கலாம் எனவும், புதிய ஆளுநர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க இருப்பதாக பேசப்படுகிறது.