ஆர்எஸ்எஸ் பிடியில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்: பரபரப்பு அறிக்கை!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (12:29 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் வாபஸ் வாங்குவதாக ஆளுநரை சந்தித்து தனித்தனியே கடிதம் அளித்தனர்.


 
 
இதனையடுத்து தமிழக சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அதிமுக உள்கட்சி பிரச்சனை என கூறி ஆளுநர் ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் ஆர்.எஸ்.எஸ் வழியில் செயல்படுவதாக தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், தினகரன் அணி 19 எம்எல்ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியே மனு அளித்தனர். அந்த மனுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் தினகரன் அணியினர் உட்பட அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் அதிமுகவை விட்டு விலகவில்லை, அதிலேயே இருக்கிறார்கள்.
 
எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டிய தேவை இல்லை என்ற பதிலை தெரிவித்துள்ளார் ஆளுநர். இது ஆளுநர் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது. அதிமுக அணிகளின் பதவிச் சண்டையால் கடந்த எட்டு மாதங்களாகத் மாநில அரசின் செயல்பாடுகள் குழம்பிக் கிடக்கின்றன.
 
பல துறைகளில் வேலைகள் தேங்கிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தலைகுனிவையும், ஆட்சி மற்றும் அரசியல் குழப்பங்களையும் மத்திய பாஜக அரசு கொண்டாடுகிறது. கொல்லைப்புற வழியில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க சூழ்ச்சி செய்கிறது.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தந்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் பதவி நீக்கம் செய்வதற்குப் பேரவைத் தலைவர் தனபால் மூலம் காரணம் கேட்கும் கடிதம் கொடுத்திருக்கும் எடப்பாடி அணியின் செயல், கட்சித்தாவல் தடைச் சட்டத்துக்குப் பொருந்தாது.
 
அதேபோல் குட்காவை விவகாரத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடைநீக்கம் செய்ய எடப்பாடி அரசு முயல்வது, ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா அதிகாரத்தை தன்னல நோக்கங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தி ஆடிய ஆட்டத்தை ஒத்தது ஆகும்.
 
இந்நிலையில் ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழிகாட்டுகிறதா அல்லது ஆர்எஸ்எஸ் வழிகாட்டுகிறதா என்ற வினா எழுந்துள்ளது. எனவே ஆளுநர், உடனடியாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் காலக்கெடு விதித்து ஆணை இட வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்