பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்: ஜி.கே.வாசன்

புதன், 7 அக்டோபர் 2015 (13:33 IST)
தமிழக அரசு, அரசு பள்ளி ஆசிரியர்களுடன் நேரிடையாகப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று தமாகா தலைவல்  ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 
 ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி, போராடி வருகிறார்கள்.
 
நேற்றைய தினம் அரசு ஆசிரியர்கள் தமிழக அரசின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நாளை (8 ஆம் தேதி) ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
 
எனவே தமிழக அரசு அரசு ஆசிரியர்களுடன் நேரிடையாகப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
 
இந்த பிரச்சனையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் நேரிடையாக அரசு ஆசிரியர் சங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, நிறைவேற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் காத்திட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்