நீதிமன்ற கண்டனத்திற்கு பிறகாவது தமிழக அரசு திருந்த வேண்டும் : ராமதாஸ்
வியாழன், 26 மே 2016 (19:00 IST)
தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் மூத்த மொழியான தமிழை வளர்க்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்காக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தியை ஒழித்து தமிழை வளர்க்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இரு திராவிடக் கட்சிகளும் தமிழை வளர்ப்பதில் மக்களை எப்படி ஏமாற்றினார்கள் என்பதை சாட்டையடி விமர்சனங்களுடன் உயர்நீதிமன்றம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழை கற்க இந்தியாவில் பல மாநில மக்களும், இந்தியாவுக்கு வெளியே பல நாட்டு மக்களும் தயாராக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு தமிழை கற்றுத் தருவதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளவில்லை.
தமிழை விட வளமையும், செழுமையும் குறைந்த மொழியான இந்தியை ரூ.50 முதல் ரூ.200 வரையிலான கட்டணத்தில் தொலைதூர கல்வி மூலம் மத்திய அரசு கற்பிக்கிறது. அதேபோன்று தமிழையும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஆர்.லட்சுமி நாராயணன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தான் உயர்நீதிமன்றம் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.
1. தமிழ் மொழி கற்பதை ஊக்குவிக்க திட்டங்களை செயல்படுத்தாதது ஏன்? அதற்காக நிதி ஒதுக்காதது ஏன்?
2. தமிழ் மொழி இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற மொழி இலக்கியங்களை தமிழுக்கும் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?
3. தமிழ் ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகளுக்கு அங்கீகாரம் வழங்காதது ஏன்?
4. அரியானாவில் 2010-ஆம் ஆண்டு வரை தமிழ் இரண்டாவது மொழியாக இருந்தது. இந்தி பேசும் பல மாநிலங்களில் தமிழ் இரண்டாவது மொழியாக தேர்வு செய்யப்படுகிறது. உலகின் பல மாநிலங்களில் தமிழ் மொழி பேசப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது தமிழை பரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?
5. தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்துவதாலும், தமிழ் செம்மொழி என்று சொல்வதாலும் என்ன பயன்? என்றெல்லாம் நீதிபதிகள் வினா எழுப்பியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினாக்கள் நீதிபதிகள் மனதில் மட்டும் எழுந்தவை அல்ல. தாய்மொழிப் பற்றுள்ள அனைத்து தமிழர்களின் மனதிலும் கடந்த பல ஆண்டுகளாக பொங்கி எழுந்த வினாக்கள் தான் அவை. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எதிரொலித்துள்ளனர். தமிழக அரசாலேயே தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது தொடர்பாக உணர்வுள்ள தமிழர்களின் கோபத்திற்கு வடிகாலாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
தமிழ் மொழி உணர்வை பயன்படுத்தி திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் முயற்சியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
2006&ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் தமிழ் மொழிச் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. அதன்படி 2006&07ஆம் ஆண்டில் முதல் வகுப்பிலும், அதற்கடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் படிப்படியாக தமிழ் கட்டாயப்படமாக்கப்பட வேண்டும்.
2015&16 ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இதை தமிழக அரசு தடுத்தது. உலகிலேயே ஒரு மாநிலத்தில் அதன் அலுவல் மொழியை படிக்காமல் பட்டங்களை பெற முடியும் என்றால் அது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். இது பெருமையல்ல... தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய ஒன்று.
தமிழ்தான் உலகின் முதன்மை மொழி என்பதை மெய்ப்பிப்பதற்கான அகர முதலி உருவாக்கும் பணி 35 ஆண்டுகளுக்கு முன் பாவாணர் காலத்தில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த பணி முடியவில்லை. தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்தன. அதன்பயனாக தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின் 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டதாகவோ, தமிழ் மொழியை மற்ற நாடுகளில் பரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக தமிழக முதலமைச்சர் தான் செயல்படுகிறார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் வாசலைக் கூட முதலமைச்சர் மிதிக்கவில்லை. அந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு தமிழை கொண்டு செல்லும் நோக்கத்துடன் அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் ஆகியோர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க போராடி அனுமதி பெற்றுள்ளனர். தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி செலுத்த வேண்டும் என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதில் ஆறில் ஒரு பங்கை அதாவது சுமார் 7 கோடியை தாங்களே செலுத்துவதாக இவர்கள் முன்வந்துள்ளனர்.
மீதமுள்ள தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால், தமிழக அரசு இதுவரை அக்கோரிக்கையை ஏற்கவில்லை. தமிழ் வளர்ச்சி குறித்த கோரிக்கைகளை முன்வைத்து போராடி, போராடி எண்ணற்ற தமிழறிஞர்கள் மாண்டு விட்டனர். அதன்பிறகும் கூட அவர்களின் கோரிக்கைகள் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டவில்லை. தமிழை வளர்ப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழை இந்த லட்சனத்தில் தான் வளர்க்கிறார்கள்.
தமிழை வளர்க்கும் விஷயத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரியான நேரத்தில் சரியான அறிவுரைகளை வழங்கியிருக்கிறது. இதை வழக்கமான ஒன்றாக கருதி ஒதுக்கி விடாமல் தமிழ் வளர்ச்சிக்கான உயர்நீதிமன்ற பரிந்துரைகள் அனைத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும்.