அரசு மருத்துவமனை தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: விஜயகாந்த் கோரிக்கை

புதன், 6 ஜனவரி 2016 (09:30 IST)
சென்னை ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தால் யாரும் இறக்கவில்லை என்றும், எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை என்றும் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திண்டிவனத்தை சேர்ந்த பாண்டுரங்கன், குன்றத்தூரை சேர்ந்த மண்ணம்மாள், ஜோலார்பேட்டையை சேர்ந்த ராஜா ஆகிய மூவரும் தீவிபத்தினால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம் சாட்டி, இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
 
ஆனால் அரசு அதை மூடிமறைக்க முயற்சி செய்கிறது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்புகூட இதே பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும், அரசு மருத்துவமனை நிர்வாகமும்தான் இந்த தீவிபத்திற்கும், உயிரிழப்பிற்கும் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
 
மழை வெள்ள பாதிப்பின்போது சென்னை தனியார் மருத்துவமனையில் மின்தடையால் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை இந்த அரசு மூடிமறைத்தது.
 
அதுபோன்று இதையும் மறைக்காமல், அரசு மருத்துவமனையில் தீவிபத்தால் உயிரிழந்தவர்கள் ஏழை, எளிய மக்கள். எனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியும், அதில் கவனக்குறைவாக செயல்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்