சரியான தொடுதல், தவறான தொடுதல் - பெண் குழந்தைகள் தின விழாவில் விளக்கம்

வியாழன், 16 அக்டோபர் 2014 (18:55 IST)
சரியான தொடுதல் எது, தவறான தொடுதல் எது சென்னை அருகே உள்ள சேவாலயா மையத்தில் நடைபெற்ற பெண் குழந்தைகள் தின விழாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் செயல்படும் சேவாலயா சேவை மையத்தில், இன்று தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
 
பெண் குழந்தைகள் இன்று பல வித சிக்கல்களை இந்தச் சமூகத்தில் சந்திக்கின்றனர். பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பாலியல் தொந்தரவுகளைச் சந்திக்கின்றனர். இது அவர்களுடைய உடல் அளவிலும் மனத்தளவிலும் அவர்களுடைய வாழ்நாளில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.  இதன் காரணமாகத் தான் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
 
விழாவில் பேசிய மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவி திருமதி எல்லிஸ் பானு, பெண் குழந்தை ஒரு குடும்பத்தின் விளக்கு என்றும் அவளைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்றும் கூறினார். மேலும் அவர் குழந்தைகளுக்கு சரியான தொடுதலையும் தவறான தொடுதலையும் பற்றிக் கூறினார். அவர் ஒவ்வொரு தாயும் தன்னுடைய பெண் குழந்தைக்கு இதனைச் சொல்லித் தருமாறும் அன்னியர்களை அறியவும் அவர்களிடம் பழகும் விதத்தைச் சொல்லித் தரும்படியும் கூறினார். 
 
விழாவில் திருவள்ளூர் மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சையது ரவூப், மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் மேனகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக சேவாலயா நிறுவனர் முரளிதரன் வரவேற்புரை வழங்க, வளாகத் தலைவர் கிங்ஸ்டன் நன்றி நவில, விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்