குற்றம் செய்யாத மாடுகளை திருப்பித் தரவேண்டும் - நீதிமன்றத்தில் விவசாயி விநோத மனு

சனி, 30 மே 2015 (17:16 IST)
குற்றம் செய்யாத மாட்டை ‘புளூ கிராஸ்’ அமைப்பிடம் இருந்து மீட்டுத் தரவேண்டும் என்று கோரி அதன் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், நெக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு சொந்தமாக ஒரு மாட்டு வண்டி மற்றும் இரண்டு மாடுகள் உள்ளன. இவற்றை நான் என்னுடைய விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறேன்.
 

 
இவற்றின் மூலம்தான் எனக்கு குடும்பம் நடத்த வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஆற்றுப் படுகையை ஒட்டி உள்ள எனது நிலத்தில் உழவுப் பணி செய்தேன். வேலை முடித்து விட்டு மாட்டு வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீஸார் எனது மாட்டு வண்டியை மடக்கினர்.
 
எனது வண்டியில் மணல் கடத்துவதாகக் கூறி மாட்டையும், வண்டியையும் பறிமுதல் செய்தனர். எனது மாடுகளை சென்னை, கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர். என்னுடைய மாடுகளை திரும்ப ஒப்படைக்கக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. மற்றும் புளூ கிராஸ் அமைப்பிடம் மனு அளித்தேன். அவர்கள் நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவு பெற்று வருமாறு அறிவுறுத்தினர்.
 
மேலும் எனது மாடுகளுக்கு உணவளிப்பதற்காக ஒரு பெரும் தொகையை செலுத்துமாறு புளூகிராஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நான் ஒரு ஏழை விவசாயி என்பதால் அவ்வளவு பணத்தை செலுத்த முடியவில்லை. மேலும், எனது மாடுகள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை.
 
எனவே, பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன், புளூகிராஸ் அமைப்பு மற்றும் மாவட்ட காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்