தந்தை மற்றும் அண்ணனால் சிறுமி பாலியல் பலாத்காரம் - வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (15:58 IST)
சிவகங்கையில் தனது தந்தை மற்றும் அண்ணனால் சிறுமி தொடர் பலாத்காரத்துக்கு உள்ளான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டி.வின்சென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது " சிவகங்கையில் 17 வயது சிறுமி தனது தந்தை, அண்ணன் மற்றும் உறவினர்கள், அரசு அலுவலர்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 4ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அந்தச் சிறுமி பலமுறை கர்ப்பமாகி, கலைத்துள்ளார் மற்றும் காவல் துறையினரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என அவர் தனது வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை மிகவும் மோசமான முறையில் உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்று இருக்கிறது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் தொடர்புடைய காவல் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெயல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய அதிகாரி அடுத்த விசாரணையின்போது, அறிக்கையுடன் ஆஜராவார் என அரசு வழக்கரிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்