ஓ.பி.எஸ் வீட்டின் மீது கல்வீச்சு - தாக்குதலில் ஈடுபட்ட சசிகலா ஆதரவாளர்கள்

வியாழன், 16 பிப்ரவரி 2017 (18:21 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசித்து வந்த வீட்டின் மீது இன்று மாலை சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ். களம் இறங்கிய பின், அதிமுக 2ஆக உடைந்தது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஏனெனில், இதுரை அதிமுகவில் 2 அதிகார மையங்கள் தோன்றியது இல்லை. கடந்த 7ம் தேதி அவர் ஜெ.வின் சமாதியில் தியானம் இருந்து விட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அதன்பின், அவருக்கும், சசிகலாவிற்கு இடையே அதிகாரப் போட்டி எழுந்தது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்ததும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். மறுபக்கம், ஓ.பி.எஸ் பக்கம் 10 எம்.எல்.ஏக்கள் மற்றும் 11 எம்.பிக்கள் சென்றனர். 
 
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னர், இன்று மாலை 4.30 மணியளவில் அவருக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
 
இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு, சசிகலா ஆதரவு அதிமுகவினர் சிலர் திரண்டு ஓ.பி.எஸ்-ற்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும், அவர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தற்போது அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
சசிகலா ஆதரவாளரும், சட்ட அமைச்சருமான சி.வி. சண்முகம் வீட்டில் சமீபத்தில் சிலர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாகவே இந்த கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. ஓ.பி.எஸ் வீட்டின் அருகில்தான், சி.வி.சண்முகம் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

வெப்துனியாவைப் படிக்கவும்