ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க தடை கோரி உச்ச நீதிமன்றம் சென்ற தேமுதிக

வியாழன், 21 மே 2015 (17:53 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
 
இக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
 
பின்பு, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசையாவிடம் வழங்குவார் என்றும், இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுப்பார் என்றும் தெரிய வருகின்றது.
 
இதனையடுத்து, தமிழக முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மே 23ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு விழாவை மிக பிரமாண்ட அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தேமுதிக வக்கீல் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
 
கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்து அளித்துள்ள தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது. கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா? அல்லது உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா? என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும். எனவே, நான் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே, சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் இதே கருத்தை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்