இந்தியாவின், சுதந்திரத்திற்கு பிறகு வாழ்ந்த தலைவர்களில் முதன்மையானவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்: ஜெயலலிதா புகழாரம்

செவ்வாய், 28 ஜூலை 2015 (00:51 IST)
இந்தியாவின், சுதந்திரத்திற்கு பிறகு வாழ்ந்த தலைவர்களில் முதன்மையானவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இது குறித்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
இளைஞர்களின் முன்மாதிரியாகவும், மிகச் சிறந்த விஞ்ஞானியாகவும், தமிழ்க் குடிமகனாகவும் விளங்கியவர் அப்துல்கலாம். அவரது மறைவுச் செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன்.
 
ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது வாழ்க்கையை துவங்கியவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் அவரது விடா முயற்சியும், கடின உழைப்பாலும், தனது அபாரத திறமையாலும் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்.
 
இந்திய விண்வெளித்துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளை இந்த நாடடே அறியும். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட அறிவியலாளர். உலக அரங்கில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவை தலைநிமிர செய்தவர்.
 
இந்தியாவின், சுதந்திரத்திற்கு பிறகு வாழ்ந்த தலைவர்களில் முதன்மையானவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இந்திய மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர்.
 
கருணையாலும், எளிமையாலும் அனைவரது உள்ளங்களையும் தொட்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக எதிலும் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்திய நாட்டுபற்று மிக்கவர். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்