செந்தில் பாலாஜி நீக்கம்: சென்னைக்கு படையெடுத்த கரூர் அதிமுகவினர்

வியாழன், 30 ஜூலை 2015 (05:07 IST)
முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆறுதல் கூற, கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் சென்னையை முற்றுகையிட்டனர்.
 
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பொறுப்பில் இருந்து,  செந்தில் பாலாஜியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ரோசய்யா நீக்கம் செய்தார். மேலும், செந்தில் பாலாஜியிடமிருந்த, கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் அதிரடியாக பறிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் இருந்த செந்தில் பாலாஜி, தமது அமைச்சர் அறைக்கு செல்வதை தவிர்த்தார். உடனே ஒரு ஜீப் வரவழைத்து அதில் ஏறி தனது வீட்டிற்கு பறந்தார்.
 
இந்த தகவல் அறிந்த கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, வட்டார நிர்வாகிகள் பலர் கரூரில் இருந்து சென்னைக்கு கார், பேருந்து மூலம் படை எடுத்தனர். அவர்கள் நேராக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற முயன்றனர். ஆனால், அவர்கள் யாரையும் சந்திக்க செந்தில் பாலாஜி முன்வரவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர்கள் சென்னையிலேயே முகாமிட்டு தங்கியுள்ளனர்.
 
அதிமுகவில் ஜெயலலிதா யாரை கட்சியிலும் சரி, பதவியிலும் சரி நீக்கினால், அவர்களை கட்சியினர் சந்திக்க முன்வரமாட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஒட்டு மொத்த கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் செந்தில் பாலாஜி பக்கமே நிற்பது வியப்பை தருகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்