ஊரில் பினாயில் பாட்டில்கள் விற்பதாக சொல்லிக் கொண்டு பாரின் சரக்கை விற்று வந்த முன்னாள் சிஆர்பிஎப் வீரர் கையும், பாட்டிலுமாக பிடிபட்டார்.
வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு உள்நாட்டில் மதுப்பிரியர்களிடையே பெரும் விருப்பம் உள்ள நிலையில் அவற்றை முறைகேடாக கொண்டு வந்து விற்கும் சிலர் அடிக்கடி பிடிபடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்தின் சிஆர்பிஎப்-ல் பணிபுரிந்த முன்னாள் வீரரே சிக்கியுள்ளது பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஆர்பிஎப் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற 58 வயதான மணிகண்டன் என்பவர் பொள்ளாச்சியில் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். அவ்வபோது அவர் பெட்டி நிறைய சில பாட்டில்களை கொண்டு செல்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரிடம் அதுகுறித்து கேட்டபோது தான் பினாயில் வியாபாரம் செய்வதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்தவர்கள் போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் மணிகண்டனின் வீட்டில் சோதனை நடத்தியதில் ஏகப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை மணிகண்டன் முறைகேடாக விற்று வந்தது தெரிய வந்துள்ளது. விமான நிலையங்களில் புரோக்கரிடமிருந்து மதுபானங்களை பெற்று வெளியே அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 60 மதுபாட்டில்கள், 36 டின் பியர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
Edit by Prasanth.K