11 ஆவது பிரசவத்தின் போது பெண் பலி: வயிற்றில் குழந்தை இறந்ததால் விபரீதம்

வியாழன், 18 செப்டம்பர் 2014 (11:10 IST)
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள மணிகண்டன் - சித்ரா என்ற தம்பதியினருக்குக் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 10 குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில், 11 ஆவது முறையாக சித்ரா, கர்பமானார். இதில் சித்ரா, பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

சித்ராவின் இறப்பு குறித்து அவருடைய மாமனார் சுப்பன் கூறுகையில், “7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென ஒரு நாள் சித்ராவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சித்ரா, குளிர்பானம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டார்.

வாங்கி கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்ததும் சிறிது நேரத்தில் வலி நின்று விட்டது என்றார். அதற்கு பின்பு 2 முறை வயிற்று வலி வந்து இருக்கிறது. அப்போதும் சித்ரா குளிர்பானம் குடித்து விட்டு சமாளித்து இருக்கிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தோம். ஆனால், சிகிச்சை பலன் இன்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

சித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டது. இதனால் உரிய நேரத்திற்கு சித்ரா சிகிச்சை எடுத்து கொள்ளாததே உயிரிழப்புக்கு காரணம். சித்ராவை இழந்து அவரது 10 குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

சித்ராவின் குழந்தைகளை நான் வளர்க்க ஆசைப்படுகிறேன். நான் அரசு வேலை பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறேன். தற்போது, வங்கி ஏ.டி.எம் மையத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறேன்.

எனது வருமானத்தை வைத்து குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்