விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

புதன், 31 டிசம்பர் 2014 (11:52 IST)
கரும்பு விவசாயிகளை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல தேவையான திட்டங்களை வகுத்து, அவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து, விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகம் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள மாநிலமாகும். பிறமாநில விவசாயிகளை விட இங்குள்ள விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கரும்பு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் அரவை பருவத்தின் போது தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகள் ஏற்கனவே வழங்கி வந்த கரும்பு கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை, எனவே அதை உயர்த்தி கொடுக்க வேண்டும் என பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
தற்போது தமிழக அரசின் சர்க்கரை துறை இயக்குனர் அனுப்பியுள்ள கடிதத்தில், மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்காமல், மத்திய அரசின் விலையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,200 மட்டும் 2014-15-ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
 
இதன் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 450 குறைவாகத்தான் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்ற செய்தி கரும்பு விவசாயிகளின் தலையில் இடியாய் விழுந்துள்ளது.
 
மேலும், உரம் விலை உயர்வு, பூச்சி மருந்து விலை உயர்வு, கரணை விலை உயர்வு, வேலை ஆட்கள் கூலி உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு, லாரி வாடகை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
 
அதனால் விளை நிலங்கள், மனை நிலங்களாக மாற்றப்பட்டு, விற்பனை செய்யும் அவலம் தமிழகத்தில் உள்ளது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அரசின் கூடுதல் பரிந்துரை விலையை உடனடியாக தாமதம் ஏதுமின்றி அறிவித்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
தமிழக விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பெரிதும் பூர்த்தி செய்யும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா முயற்சிக்கிறது.
 
முல்லை பெரியாரில் 142 அடி அளவிற்கு நீரை தேக்கிவைப்பதை தடுத்து நிறுத்தவும், அதன் அருகிலேயே புதிய அணைகட்டவும் கேரளா முயற்சிசெய்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாக தெரியவில்லை.
 
சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை இதுவரையிலும் கொடுக்கவில்லை, அரசு அறிவிக்கின்ற விலையையும் கொடுப்பதில்லை, இதை தட்டிக்கேட்க வேண்டிய அரசு மவுனமாக இருக்கிறது.
 
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
 
இதன் காரணமாக சர்க்கரை ஆலைகள் பல மாதங்களாக மூடப்பட்டு, பருவத்திற்கு வந்த கரும்பு வெட்டப்படாததால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு சர்க்கரை ஆலை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி இப்பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைத்திட வேண்டுகிறேன்.
 
விவசாயத்தையே நம்பி வாழும் தமிழக விவசாயிகளை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லத் தேவையான திட்டங்களை வகுத்து, அதை திறம்பட செயல்படுத்தி, விவசாயிகளை காப்பாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்