மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தோடு தற்கொலை

சனி, 20 டிசம்பர் 2014 (22:02 IST)
சென்னையை அடுத்த பெரம்பூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டனர்.

பெரம்பூர் கோபால நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன் –கௌரி, இவர்களது ஒரே மகன் சதீஸ்குமார் (24). சதீஸ்குமார் பி.இ. பட்டதாரி ஆவார். சதீஸ்குமாருக்குப் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

திடீரென்று சதீஸ்குமார் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரூ.30 லட்சம் வரை மருத்துவ செலவு செய்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மகனை காப்பாற்றி விட வேண்டும் என பெற்றோர்கள் பல முயற்சி செய்தனர்.

ஆனாலும் மருத்துவர்கள் இனி சத்தீஸ்குமார் உயிர் பிழைக்க வழி இல்லை என்று கூறி விட்டனர். சத்தீஸ்குமார் உடல் மெலிந்து காணப்பட்டார். இந்நிலையில் சத்தீஸ்குமாரின் கை, கால்கள் செயல் இழந்தது.

தனது மகன் சாவின் நாட்களை எண்ணி கண்ணீர் விடுவதை நினைத்துபெற்றோர்கள் வருந்தினார். வேதனையில் இனி வாழ முடியாது என எண்ணிய கமலகண்ணன் தான் தற்கொலை செய்ய போவதாக கவுரியிடம் கூறியுள்ளார்.

பின்னர் கமலகண்ணனும், கவுரியும் சேர்ந்து சத்தீஸ்குமாரிடம் உன்னை இந்த நிலையில் பார்த்துக்கொண்டு எங்களால் வாழ முடியாது. அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறினர். அதற்கு சத்திஸ்குமார் என்னால் நீங்கள் தற்கொலை செய்வதை விட நான் தற்கொலை செய்வது தான் சரி என்று கூறினான்.

இதனால், 3 பேரும் சேர்ந்து தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். சத்தீஸ்குமாரின் கை, கால்கள் செயல் இழந்து விட்டதால் அவரால் எழுந்து நடக்க முடியாது. அதனால் நேற்று இரவு கமலகண்ணனும், கவுரியும் சேர்ந்து தங்களது ஒரே மகனான சத்தீஸ்குமாரை மின் விசிறியில் கயிறு மூலம் தூக்கில் தொங்கவிட்டனர்.

பின்னர் வீட்டின் மேற்கூரையில் கமலகண்ணனும், கவுரியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். காலையில் வீட்டின் கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது சத்தீஸ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.

உடனே இது குறித்து செம்பியம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் 3 பேர் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்