மத்திய அரசு நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 3 பேர் கைது

திங்கள், 4 மே 2015 (14:35 IST)
சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில், கடை நிலை ஊழியர்கள் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை ஆவடியில் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இங்கு 650 கடை நிலை ஊழியர்கள் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 1 ஆம் தேதி நடைபெற்றது.
 
இந்தத் தேர்வை, சுமார் 28 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஆவடியில் நடைபெற்றது.
 
இந்நிலையில் சனிக்கிழமை 279 பேர் தங்களது சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். அவர்களின் கைரேகையையும், தேர்வு எழுதிய போது பதிவு செய்யப்பட்ட கை ரேகையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.
 
அப்போது பீகார் மாநிலம் முங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்லாப் குமார். வயது 26; சஞ்சீவ் குமார் வயது 30; சந்தன் குமார் வயது 23; ஆகியோரின் கை ரேகைகள் தேர்வு எழுதிய போது உள்ள கை ரேகையுடன் பொருந்தவில்லை.
 
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்