ஈரோட்டில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி

சனி, 23 ஆகஸ்ட் 2014 (16:29 IST)
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பெய்த கனமழையால் ஏற்பட்டக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஈரோடு மாவட்டம் கர்நாடக எல்லையில் உள்ளது தாளவாடி. இது அதிகமான வனப்பகுதியைக் கொண்டது. 22.08. 2014 ஆம் தேதி இரவு தாளவாடி பகுதியில் கனமழை பெய்தது.

அப்போது தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடியைச் சேர்ந்த 49 வயதுடைய சந்திரசேகரன், 46 வயதுடைய பால்ராஜ் ஆகிய இருவரும் அருகே உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிசில்வாடிக்குச் சென்றுவிட்டு மொபட்டில் மெட்டல்வாடி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதி வழியாகச் செல்லும் தரைப் பாலத்தில் கனமழையின் காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு பின்னர் தண்ணீர் குறைந்துவிட்டது என எண்ணி மொபட் மூலம் தரைபாலத்தின் மேல் ஓடிய தண்ணீரை கடக்க முயற்சித்தனர்.

அப்போது காட்டாற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் இவர்கள் இருவரையும் தண்ணீர் அடித்து சென்றுவிட்டது.

இன்நிலையில் 23 ஆம் தேதி காலை( காலை) பால்ராஜ் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது.

சந்திரசேகர் பிரேதத்தைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதேபோல் பண்ணாரி அருகே புதுகுய்யனூர் காட்டாற்று வெள்ளத்தில் 56 வயது மதிக்கதக்க ஒரு ஆண் பிரேதம் கரை ஒதுங்கியுள்ளது. இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்