மன்னார்குடியில் சசிகலா பேனர் கிழிப்பு; தினகரன் உருவ பொம்பை எரிப்பு

புதன், 23 ஆகஸ்ட் 2017 (18:41 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர்.


 

 
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அணி இனைந்த பின், அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது.   
 
மேலும்,  தங்கள் வசம் உள்ள எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணி பக்கம் சென்று விடக்கூடாது எனக் கருதிய தினகரன் தரப்பு, அவர்களை பாண்டிச்சேரியில் உள்ள விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.
 
இந்த விவகாரம் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது. எனவே எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டின் வாசல் முன்பு தினகரனின் உருவ பொம்மையை நேற்றே சிலர் எரித்தனர். அதேபோல், இன்றும் அங்கு கூடிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தினகரனின் உருவ பொம்மையை எரித்ததோடு,  ‘எம்.எல்.ஏக்களை வெளியே அனுப்பு’ என முழக்கமிட்டனர்.
 
மேலும், தினகரனின் சொந்த ஊரான மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர் கிழிக்கப்பட்டது. மேலும், தினகரனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. அதேபோல், வேலூரிலும், அவரின் உருவ பொம்மையை எரித்து ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்