பழனியில் பாசன கால்வாயை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது விவசாயிகள் புகார்

சனி, 29 ஆகஸ்ட் 2015 (11:51 IST)
பழனி அருகே பாசன கால்வாயை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பழநி அருகே உள்ள விலாங்கோம்பை தேக்கன் தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையில் இருந்து பழநி கண்மாய்களுக்கு இந்த வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரால், தேக்கன் தோட்டம் பகுதியில் 100 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இப்பகுதியில் நடிகர் மாதவனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்திற்காக தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார் என குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் விளைபொருள்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த களம், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிர மித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விசாயிகள் இது குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நடிகர் மாதவன் தோட்டத்திற்காக பாசன கால்வாய், களத்து புறம்போக்கு, பழநிக்கு குடிநீர் குழாய் அமைந்த பகுதியை ஆக்கிரமித்து வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர்கள் கால்வாயின் போக்கையே மாற்றியுள்ளனர். இதனால் 100 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்