பவானிசாகர் அருகே பயணிகளை மிரட்டும் யானை

வியாழன், 20 நவம்பர் 2014 (13:43 IST)
பவானிசாகர் அருகே வனப் பகுதியை ஒட்டிய சாலையில் ஓரமாக வந்து நின்று, அந்த வழியாகச் செல்லும் பயணிகளை ஒற்றை ஆண் யானை மிரட்டுவதால், இந்த வழியாகச் செல்பவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 
ஈரோடு வன மண்டலத்திற்கு உட்பட்டது பவானிசாகர் வனப் பகுதி. இந்த வனப் பகுதியில் யானைகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பவானிசாகர் வனப் பகுதியில் மழையில்லாத காரணத்தால் வனப் பகுதியில் தீவனங்கள் இல்லாமல் காட்டு யானைகள் சிரமப்பட்டன. தண்ணீருக்கே விவசாயப் பகுதியைத் தேடி சென்றன.
 
இந்த நிலையில் கடந்த மாதம் தொடக்கம் முதல் பவானிசாகர் வனப் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக மாறி எங்கு பார்த்தாலும் புற்களாய்க் காட்சியளிக்கிறது. மரங்கள் செழிப்பாக வளர்ந்து நிற்கிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
 
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீரங்கராயன் கரடு அருகே ரோட்டின் ஓரத்தில் வளர்ந்து நிற்கும் புற்களை மேய ஒரு ஆண் யானை முகாமிட்டது. இந்த ஆண் யானை, பெரிய உருவத்தில், நீண்ட தந்தங்களுடன் கும்கி யானைபோல் இருப்பதால் இந்த யானையைப் பார்த்த பயணிகள் பயந்து நடுங்கி, வந்த வழியாகப் பின்னோக்கிச் செல்கின்றனர்.
 
நேற்று மாலை ஐந்து மணிக்கு வந்த இந்த ஒற்றை யானை, இன்று காலை ஏழு மணிவரை அந்தப் பகுதியிலேயே நின்றுகொண்டு அட்டகாசம் செய்ததால் இருசக்கர வாகனத்தில் இந்த வழியாக யாரும் செல்லவில்லை. லாரி, பஸ் போன்ற பெரிய வாகனம் மட்டுமே அச்சமின்றிச் சென்றது. இன்று காலை ஏழு மணிக்கு மேல் அந்த ஒற்றை யானை, மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றதால் இந்த வழியாகச் செல்லும் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்