தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்: கருணாநிதி

திங்கள், 14 மார்ச் 2016 (07:53 IST)
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.


 

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகச் சட்டப்பேரவைக்கான அட்டவணை கடந்த 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
 
ஆனால் பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் குறுகிய அரசியல் லாபத்திற்காக அவற்றை மீறுவதற்கான நடவடிக்கைகள் பெருவாரியாக நடந்து கொண்டுதான் உள்ளன.
 
தேர்தல் நேர்மையாக நடக்கவேண்டுமென்பதற்காக, சென்னை மாநகராட்சியில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும்  ஊழியர்கள், அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய மாநகராட்சிக்கு  அறிவுரை வழங்கி தேர்தல் கமிஷன் கடந்த டிசம்பர் மாதமே கடிதம் அனுப்பியது. 
 
அதற்கேற்ப, மாநகராட்சி உயர் அதிகாரிகள் அவர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்ட போதிலும் துறைத் தலைவர்கள் தங்களுக்கு வேண்டியோரை பணியிட மாறுதல் செய்யாமல்  இருக்கிறார்கள்.
 
ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பவர்களை உடனே  இட மாறுதல் செய்து தேர்தல் நடத்தை விதிகளின்படி நடந்திடத் தேர்தல் கமிஷன் மாநகராட்சியை வலியுறுத்த வேண்டும்.
 
தேர்தல்  நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்கள் அலுவலகங்களை கட்சிக் காரியங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். 
 
இதற்கான தீவிர ஆய்வுகளை தேர்தல் ஆணையம் நடத்தி,  தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டக் கலெக்டர் எம். கருணாகரனே தமிழக ஊரக பஞ்சாயத் ராஜ்  இயக்குநருக்கு அனுப்பியுள்ள செய்தியில், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குனர் தேர்தல் நடத்தை விதி முறைகளை வேண்டுமென்றே மீறி, முன் தேதியிட்டு கோப்பில் கையெழுத்திட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
 
இந்த மாவட்டத்தில்  மேம்பாட்டுத் துறையில் 3 ஆண்டுகளில் பணியாற்றி நிறைவு செய்த அதிகாரிகளை இதுவரை பணி மாறுதல் செய்யவில்லை. அதற்கான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
 
இந்த ஒரு மாவட்டத்தில் மாத்திரமல்ல; தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் பணியாற்றும் மாவட்ட திட்ட அதிகாரிகள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள்.
 
ஏன் ஒரு சில மாவட்ட ஆட்சியர்களே கூட தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களாகவே பணியாற்றி வருகிறார்கள்.
 
உள்ளாட்சி தொடர்பான பல்வேறு திட்டங்களை மாவட்டத் திட்ட அதிகாரிகள்தான் செயல்படுத்த வேண்டும்.
 
அந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைமைப் பொறியாளர்கள் உள்ளாட்சித் துறையில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
 
திண்டிவனம் காவல் துறை டி.எஸ்.பி. மூன்றாண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்.   இவர் அதிமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதுதான் மாற்றாமல் இருப்பதற்குக் காரணம். 
 
அதிமுக உறுப்பினரான, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. நடராஜ், அலெக்சாண்டர்  உட்பட பல போலீஸ் அதிகாரிகளின் வீட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிராக ஏராளமான போலீசார் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தலைவர்களின் அறைகள், மன்ற கூட்டம் நடக்கும் அறைகளைப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பொறியாளரின் அறையில் அமர்ந்து கொண்டு, ஆவணங்களை தலைவர் பார்வையிட்டு எடுத்துச் சென்றதாகப் புகார் கூறப்படுகிறது.
 
தமிழக அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள், அரசு நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் காண்பிக்கப்படுகிறது.
 
அதிமுக தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளால் நடத்தப்படும், தொலைக் காட்சிகளுக்கு அரசு கேபிள் நிறுவனத்தின் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. அவற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள்.
 
வனத்துறை அமைச்சரின் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
 
இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அதிமுக அரசினால் காப்பாற்றப்படாமல், அவற்றைப் புறக்கணிப்பதும், அவற்றிற்கு எதிராக நடப்பதும் தொடர்ந்து கொண்டே இருப்பதை மேலும் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
 
எனவே மத்திய தேர்தல் ஆணையமும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியும் உடனடியாக முக்கியமான இந்தப் பிரச்னைகளில் தலையிட்டு நியாயத்தை நிலைநாட்டிட வேண்டும். 
 
ஆளுங்கட்சிக்கு  ஓர் அணுகுமுறை, எதிர்க் கட்சிகளுக்கு வேறொரு அணுகுமுறை என்றில்லாமல், சட்டமும், நடத்தை விதிகளும் அனைவர்க்கும்  சமம் என்ற முறையில், துளியும் பாரபட்சமின்றி அமலாக்கம் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்