தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? சத்யபிரதா சாகு தகவல்..!
திங்கள், 27 நவம்பர் 2023 (16:45 IST)
நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக 9.13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்ய இதுவரை சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று கூறிய அவர், திருவண்ணாமலையில் தீப திருவிழாவை ஒட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதி நடத்தப்படும் என்றும் கூறினார்.