மோடியின் தாயை கேவலாமாக விமர்சித்த இளங்கோவன்: பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்து!

ஞாயிறு, 27 நவம்பர் 2016 (11:34 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பெண் நடனமாடவா வங்கிக்கு வந்தார் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விமர்சித்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


 
 
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இதனை வாங்க சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களோடு வங்கியில் வரிசையில் நின்றார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.
 
இது விளம்பரம் என்றும் அவர் நடிக்கிறார் எனவும் விமர்சனம் செய்தது பாஜக. இதற்கு பதில் கூறிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரதமர் மோடியின் அம்மா வங்கிக்கு வந்தாரே அவர் நடனம் ஆட வந்தாரா? என கொஞ்சம் கூட நாகரீகம் இன்றி பேசியுள்ளார்.
 
97 வயதான ஒரு முதியவர் என பாராமலும், அவர் ஒரு பெண் என்று பாராமலும் அவர் நடனம் ஆடவா வங்கிக்கு வந்தார் என இளங்கோவன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் அவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
இதற்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடியையும் சேர்த்து மிகவும் இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கிய இளங்கோவன் சொந்த கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.விஜயதாரணியை படு கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்தார்.
 
பெண்கள் குறித்தான இவரது சர்ச்சை கருத்துக்கள் தொடர்ந்து வருவது அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளங்கோவன் சபை நாகரீகத்துடனும், நாவடக்கத்துடனும் பேச வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்