ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு அமெரிக்கா துணை போகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

திங்கள், 22 ஜூன் 2015 (12:17 IST)
இலங்கை தமிழர்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு அமெரிக்கா துணை போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்.
 
 இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழித்தொழிப்பின் ரணங்கள் ஆறாத நிலையில், அதற்கு நீதி கிடைக்காத சூழலில் இப்போதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்கா துணைபோகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
 
அமெரிக்க அரசின் மனித உரிமைகளுக்கு எதிரான இந்த செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அமெரிக்க அரசின் உள்துறை சார்பில் ஆண்டு தோறும் 'பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை' வெளியிடப்படுவது வழக்கம்.
 
2014 ஆம் ஆண்டுக்கான அறிக்கை இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை தொடர்பான பகுதியில் இராஜபக்சே அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கும் அமெரிக்க உள்துறை, "விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்ற குற்றச்சாட்டில் 2014ஆம் ஆண்டில் 16 அமைப்புகளையும் 422 தனிநபர்களையும் இலங்கை அரசு தடை செய்தது.
 
ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அது காட்டவில்லை" எனக் குறிப்பிட்டிருப்பதோடு " இந்த நடவடிக்கை ஐநா சபையின் விதிகளுக்கு உடன்பாடாக இல்லை" எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
 
ஆனால் அதற்கு நேரெதிராக அறிக்கையின் இன்னொரு பகுதியில் எந்தவித ஆதாரமும் இன்றி "விடுதலைப் புலிகளின் பொருளாதார வலைப்பின்னல் இப்போதும் வலிமையோடு இருப்பதாக" தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் இருந்த அதே வாசகங்கள் இந்த ஆண்டுக்கான அறிக்கையிலும் அப்படியே இடம் பெற்றிருக்கின்றன.
 
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அமெரிக்க அரசின் அறிக்கையை இலங்கையை ஆளும் மைத்ரி தலைமையிலான சிங்கள அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைந்திருக்கிறது.
 
தமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவ முகாம்களை மூடவேண்டும், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும், தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு ராஜபக்சேவைப் போலவே இனவெறியைத் தூண்டிவிட்டு சிங்கள வாக்குகளைப் பெறும் முயற்சியில் மைத்ரியும் ஈடுபட்டிருக்கிறார்.
 
இலங்கை இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் உத்தரவு பிறப்பிக்கவிருந்த நேரத்தில் தலையிட்டு இலங்கை அரசைக் காப்பாற்றிய அமெரிக்கா இப்போதும் மைத்ரி அரசுக்கு உதவும் வகையிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
 
அநீதிக்குத் துணைபோகும் அமெரிக்காவின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அறிக்கையில் உள்ள கருத்துகளை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
 
அமெரிக்காவின் இந்த தமிழர் விரோத அறிக்கையைத் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்