தினகரனை திணறடிப்பது எப்படி?: மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி திடீர் ஆலோசனை!

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (09:32 IST)
கடந்த 4-ஆம் தேதி அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டதை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணியளவில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


 
 
அதிமுகவின் இரு அணிகளையும் கடந்த 4-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் இல்லையென்றால் நான் மீண்டும் கட்சிக்குள் தீவிரமாக செயல்படுவேன் என தினகரன் கெடு விதித்திருந்தார். ஆனால் இரு அணிகளும் இன்னமும் இணையவில்லை.
 
இதனையடுத்து தினகரன் கடந்த 4-ஆம் தேதி கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியளித்தார். அந்த நிர்வாகிகள் பட்டியலில் பெரும்பாலானோர் தினகரன் ஆதரவு அணியினர். இதற்கு அமைச்சர்கள் எதிர்வினையாற்றினர்.
 
பொதுச்செயலாளர் நியமனமே நிலுவையில் உள்ளபோது அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் பதவி கேள்விக்குறியே எனவே தினகரனுக்கு நிர்வாகிகளை நியமிக்க அதிகாரம் இல்லை என அமைச்சர்கள் கூறினர்.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
 
இந்த கூட்டத்தில் தினகரன் புதிய நிர்வாகிகளை நியமித்தது குறித்தும், அடுத்தக்கட்டமாக தினகரனை சமாளிப்பது எப்படி குறித்தும், நீட் தேர்வு குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர்கள் தினகரன் குறித்து நிச்சயம் பேட்டியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்