அரவக்குறிச்சியில் ரூ.35 லட்சம் பறிமுதல் - புகுந்து விளையாடும் பணம்

ஞாயிறு, 13 நவம்பர் 2016 (15:24 IST)
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தமாந்துறையில், மினி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையொட்டி மூன்று தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒத்தமாந்துறை சோதனைச் சாவடியில் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையில், நேற்று சனிக்கிழமையன்று அதிகாலை தேர்தல் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த பயணிகள் மினி வேனில் ரூ. 35 லட்சத்து 4 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் தாராபுரத்தை சேர்ந்த சிறுதானிய வியாபாரி பல ராமன் (65). திருச்சியில் உள்ள சிறுதானிய மொத்த வியாபாரிக்கு வழங்குவதற்காக, கடை ஊழியர் ரமேஷிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தேர்தல்அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த தொகை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

முன்னதாக, மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 2.94 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடைபெறவுள்ள தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இரண்டு தொகுதிகளுமே, அதிகப்படியான பணப் பட்டுவாடா நடைபெற்றதால்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்