ஆர்.கே.நகர் தேர்தல் ; ரத்து செய்ய முடிவெடுத்த தேர்தல் ஆணையம் ; மன்றாடிய அதிமுக?
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (16:45 IST)
பணப்பட்டுவாடா புகாரையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவெடுத்ததாகவும், ஆனால், அந்த முடிவை கை விடுமாறு அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம் (டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியினரும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்கட்சியான திமுகவும், சுயேச்சையில் போட்டியிடும் டிடிவி தினகரனும் மற்றும் இதர சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் உள்ள வாக்களர்களுக்கு அதிமுக தரப்பில் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. மொத்தம் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை அன்றே பணப்பட்டுவாடா செய்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக தரப்பு ஆட்களை, திமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனாலும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பல இடங்களில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை தட்டிக்கேட்ட மற்ற கட்சியினர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகரே களோபரமானது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே போலீசாரும் செயல்பட்டதாக புகார் எழுந்தது.
எனவே, தினகரன் மற்றும் திமுக தரப்பு ஆட்கள் சாலை மறியலில் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழிசை சவுந்தரராஜன், மு.க.ஸ்டாலின், தினகரன் ஆகியோர் அதிமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷனிடம் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில், ஏராளமான புகார் வந்ததையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தலை மீண்டும் ரத்து செய்யும் முடிவிற்கு தேர்தல் ஆணையம் வந்துவிட்டதாம். இதை அறிந்த எடப்பாடி தரப்பு, உடனடியாக தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ‘இந்த தேர்தலில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறும். அதிமுகவிற்கு சாதகமான சூழலை நிச்சயம் உருவாக்குவோம். எனவே, தயவு செய்து தேர்தலை நிறுத்த வேண்டாம்’ என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவேதான், அந்த திட்டத்தை தேர்தல் ஆணையம் கைவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.