முதல்வர் உடல்நிலை சரியில்லாதபோது இப்படி பேசியிருக்கக் கூடாது: கடுப்பாகும் வைகோ

திங்கள், 7 நவம்பர் 2016 (17:25 IST)
”கடந்த சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை" என்று அண்மையில் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் வைகோ கூறியிருந்தார்.
 

 
இதற்கு பதிலளித்த பிரேமலதா, ”கூட்டணி வேண்டும் என்று தேடி வந்தவரும் அவர்தான். இன்றைக்கு விமர்சனத்தை வைத்திருப்பதும் அவர்தான். ஆகையால் இதுபற்றி அவர்தான் சொல்ல வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார். 
 
இந்நிலையில், பிரேமலதா கருத்து குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதலளித்த வைகோ, ”முற்றிலும் உண்மை. நாங்கள்தான் நேரில் போய் விஜயகாந்த்தை அழைத்தோம். எத்தனையோ கோடி ரூபாய் கூட்டணிக்காக பேசப்பட்டது என்றும், பழம் நழுவி பாலில் விழும் என்றும் பேச்சுக்கள் அடிப்பட்டன.
 
அந்த சூழ்நிலையில் இதையெல்லாம் உதறிவிட்டு, எங்களோடு வந்தவர் விஜயகாந்த். அப்படி வந்தவரை நாங்கள் வேட்பாளராக அறிவித்தோம்” என்றார்.
 
மூன்று மாதத்தில் புதிய ஆட்சி வரும் என்று துரைமுருகன் கூறியிருக்கிறாரே? என்று கேட்டபோது, ”ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர், கலைஞருடன் எப்போதும் உடன் இருப்பவர், ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருக்கக் கூடாது.
 
முதல்வர் உடல்நிலை சரியில்லாதபோது இப்படி பேசியிருப்பது மனிதாபிமற்ற செயல். அவர் யாரையோ திருப்திபடுத்த கூறியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்