ஜெ.வின் கைரேகை எடுத்த மருத்துவர் பாலாஜிக்கு பொருத்தமில்லாத பதவி - விஜயபாஸ்கர் அடாவடி

புதன், 14 ஜூன் 2017 (15:11 IST)
அப்பல்லோவில் மறைந்த முதல்வர் ஜெ.விற்கு சிகிச்சையளித்த மருத்துவக்குழுவில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜிக்கு பொருத்தமில்லாத துறையில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி உயர்வு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 

 
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. எனவே, அதிமுக வேட்பாளர்களுக்கு பி பார்ம் படிவத்தில், பொதுச்செயலாளர் என்கிற முறையில் ஜெயலிதா கையெழுத்திட வேண்டும் என்பது விதி. ஆனால், அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரால்  கையெழுத்து போட முடியவில்லை. எனவே, அவரின் கை ரேகை பெறும் வேலையை மருத்துவர் பாலாஜியே மேற்கொண்டார். இது அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்பார்வையிலேயே நடந்தது.
 
அதன்பின் வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியபோது, ஜெ.விடம் கைரேகையை பெற்ற மருத்துவர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. ஆனால், இதற்கு பாலாஜி மறுப்பு தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், தற்போது தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் இந்த பதவி உயர்வு அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் பாலாஜிக்கு அந்த துறையில் எந்த அனுபமும் இல்லை எனக்கூறப்படுகிறது. அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்