ரூபாய் நோட்டுக்களில் டாக்டர் அம்பேத்கார் படம் அச்சிடக்கோரி போராட்டம்

திங்கள், 5 அக்டோபர் 2015 (06:02 IST)
இந்திய ரூபாய் நோட்டுக்களில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் படம் அச்சிட வேண்டும் என்று தலித் அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
கடந்த 1993 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்திய ரூபாய் நோட்டுகளில் அசோகர் தூண் படமே இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு, ரூபாய் நோட்டுகளில் தேசப்பிதா மகாத்மா காந்தி படத்தை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, முதன் முதலில் 500 ரூபாய் நோட்டில் காந்தியின் உருவம் இடம் பெற்றது. இதனையடுத்து, 1996 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு வெளியிடும் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மகாத்மா காந்தி படம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.
 
இந்த நிலையில், ரூபாய் நோட்டுக்களில்,  காந்தி படம் மட்டுமின்றி, இந்திய விடுதலைக்கு போராடிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்  படத்தையும் அச்சிட வேண்டும் என்று கோரி கரூரில் உள்ள பல்வேறு தலித் அமைப்புகள் மற்றும் சமுக அமைப்புகள் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலித் பாண்டியன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதமும் அனுப்பி வைத்தனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்