கபாலி படம் வெளியாகும் போது, அவரின் கட் அவுட் அல்லது போஸ்டரில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரஜினி ரசிகர்களுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கபாலி. இந்த படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது, அவர்களின் ரசிகர்கள் அவர்களின் கட் அவுட் மற்றும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று.
எனவே, கபாலி படம் வெளியாகும் போது, பாலாபிஷேகம் செய்வதில் ரஜினி ரசிகர்கள் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், அப்படி செய்ய வேண்டாம் என பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்யநாராயனா மற்றும் சிலரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தடுக்க கூறியும், அதற்குபதில் ரத்த தானம், உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு தானம் மற்றும் மது, சிகரெட் போன்ற போதை வஸ்துகளுக்கெதிரான விழிப்புணர்வு முகாம் நடத்தி இந்த சமூகத்திற்கு நற்பணிகளை செய்திட வலியுறுத்த கோரியும் கோரிக்கை விடப்பட்டிருந்தது
அந்த மனுவை பெற்றுக் கொண்ட சங்க நிர்வாகிகள், கண்டிப்பாக பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களை அறிவுறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.