ஐந்து பேர் நாய் கடித்து வந்தால்தான் ஊசியா? - சிபிஎம் கண்டனம்

வியாழன், 24 செப்டம்பர் 2015 (21:20 IST)
ஐந்து பேர் நாய் கடித்து ஒன்றாக வந்தால் தான் ஊசி போடப்படுமென நிலக்கோட்டை அரசு மருத்துவமனை கூறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 
இதுகுறித்து கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.காசிமாயன் விடுத்துள்ள அறிக்கையில், “நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மருத்துவர்கள் பல சமயங்களில் தாமதமாக வருவதால் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
 
போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர், நோயாளிகளை தாம் தனியாக வைத்துள்ள மருத்துவமனைக்கு வருமாறு கூறுவதாக புகார் எழுந்துள்ளது.
 
நாய்கடியால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு உடனடியாக ஊசி போடவேண்டும். நான்கு பேர் வரும் வரை அவர்களை காத்திருக்க வைக்கக்கூடாது. உயர்தர மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்