ஜெயலலிதாவே குற்றவாளி; பிறகு எதற்கு ஆட்சி? - பொங்கும் திருமாவளவன்

புதன், 15 பிப்ரவரி 2017 (00:54 IST)
ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று தீர்ப்பு அமைந்திருப்பதால் தற்போதுள்ள ஆட்சி தொடருவதில் எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


 

சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஜுன் மாதம் முடிவடைந்தது. இந்திய அளவில் ஊழல்வாதிகள் அச்சப்படும் அளவில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனை விசிக வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதே வேளையில் மறைந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவும் இதில் குற்றவாளிதான் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது.

கடந்த அதிமுக சட்டசபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய வாக்குகள் ஜெயலலிதாவிற்காக வழங்கப்பட்ட வாக்குகள். மக்கள் ஜெயலலிதாவிற்கு வழங்கிய வாக்குகளின் அடிப்படையில்தான் இங்கு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று தீர்ப்பு அமைந்திருப்பதால் தற்போதுள்ள ஆட்சி தொடருவதில் எந்த வகையிலும் நியாயம் இல்லை.

விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஜெயலலிதாவும் குற்றவாளி என்று தீர்ப்பு அமைந்துவிட்டதால், அடுத்து பொதுத் தேர்தலை நோக்கி போவதுதான் நியாயமாக இருக்க முடியும். மீண்டும் தேர்தல் நடத்தி மக்கள் வாக்களிப்பதன் மூலம் புதிய அரசு அமைந்தால் தமிழகத்திற்கு நன்மைகள் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்