ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு: கருணாநிதி அறிவிப்பு

திங்கள், 25 மே 2015 (13:49 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
 

 
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.
 
இந்தக் கூட்டம் முடிந்தபின் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் 11.5.2015 அன்று வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று, இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா அவர்களும், கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் அவர்களும், கர்நாடக அரசுக்கு தெளிவாகப் பரிந்துரை செய்துள்ளார்கள்.
 
குறிப்பாக பி.வி.ஆச்சார்யா அவர்கள் இந்த வழக்கில் கர்நாடக மாநில அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், அது தவறான சட்ட முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றே அந்த அரசுக்கு ஆணித்தரமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கியமான ஊடகங்களும், சட்டவல்லுநர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள். கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும், இந்த வழக்கின் சிறப்பு வழக்கறிஞரும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்களின் பரிந்துரையை ஏற்று, கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். தொடக்கத்தில் இந்த வழக்கினைத் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி அவர்களும் இந்த வழக்கிலே தானே மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
 
இந்த வழக்கில் பங்கேற்க திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தால் திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்