விஜய் எவ்வளவு வாக்குகளை வாங்குவார்?.. திமுக மீண்டும் ஆட்சி அமைக்குமா?.. ஒரு அலசல்..

வெள்ளி, 24 ஏப்ரல் 2026 (14:00 IST)
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இந்த முறை நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

எதிர்பார்த்தது போலவே முதல் நிலை வாக்காளர்களும் இளம் வாக்காளர்களும் விஜயின் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என பார்க்கப்படுகிறது. 85.15 சதவீத வாக்குகள் பதிவானதால் கண்டிப்பாக இது விஜய்க்கு சாதகமாகவே அமையும். விஜய் பல தொகுதிகளிலும் வெற்றி பெறுவார். திமுக தோல்வியடையும் அல்லது யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது.. விஜயின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் திமுகவின் புள்ளிவிபர புலிகள்  சொல்வதோ வேறு மாதிரி இருக்கிறது

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 2.09 கோடி வாக்குகளையும், அதிமுக - பாஜக கூட்டணி 1.83 கோடி வாக்குகளையும், நாதக 30 லட்ச வாக்குகளையும்,  அமமுக 10 லட்ச வாக்குகளையும், மநீம 15 லட்ச வாக்குகளையும் வாங்கியது.

இந்த தேர்தலில் விஜய், திமுக, அதிமுகவிடமிருந்து அதிகபட்சமாக 20 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சியிடமிருந்து 30 சதவீத வாக்குகளையும் பெற்றால் என்றால் வாக்கு விவரம் பின்வருமாறு அமையும்:

• திமுக கூட்டணி: 1.79 கோடி - 40.3%
• அதிமுக கூட்டணி: 1.54 கோடி - 34.5%
• விஜய் (தவெக): 92 லட்சம் - 20.5%
• சீமான் (நாதக): 21 லட்சம் - 4.5%

விஜய் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிரான வாக்குகளாகக் கருதப்பட்டாலும், அவர் திமுக மற்றும் அதிமுக வாக்குகளைச் சமமாகப் பிரிக்கிறார் என்கிற கணக்கின்படி பார்த்தாலும் திமுக கூட்டணி 6 சதவீத கூடுதல் வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறது.

புள்ளிவிவரங்களின்படி, விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் அடிப்படை வெற்றியைப் பாதிக்கும் அளவுக்கு இல்லை. மாறாக, எதிர்க்கட்சி வாக்குகள் பலவாறாகச் சிதறுவது திமுக மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யவே சாதகமாக அமையும்.

சுருக்கமாகச் சொன்னால், விஜய் 20 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், திமுகவின் வெற்றி உறுதியாகவே இருக்கிறது என திமுக புள்ளிவிபர புலிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்