கலர் கலரா கதை விடும் மத்திய அரசு: புதிய கல்விக் கொள்கையை சாடும் உதயநிதி!!

வெள்ளி, 31 ஜூலை 2020 (12:49 IST)
புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கும் வகையில் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 
 
தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் இதனை எதிர்த்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்
 
அதில், புதிய கல்விக்கொள்கை என்பதன் மூலம் மாநில உரிமைகள், சமூக நீதி போன்றவற்றின் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்தியுள்ளது மத்திய அரசு. யாரையும் கலந்தாலோசிக்காமல் பாஜக கொள்கைகளை எல்லாம் வலியக் கோத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.
 
ஆத்ம நிர்பார், தற்சார்பு என்றெல்லாம் கலர்கலராக கதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கல்வியில் முதலீடு செய்யலாம் என புதிய கல்விக்கொள்கையில் கூறியிருப்பது ஏன்? இந்தியாவை உலக கார்ப்பரேட்களின் கல்விச்சந்தையாக்கி தனியாருக்குத் திறந்துவிடும் இந்த நோக்கம் கண்டிக்கத்தக்கது.
 
மொத்தத்தில் புதிய கல்விக்கொள்கை என்பது சமூக நீதி, மாநில உரிமை, கிராமப்புற மாணவர்கள் நலனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, தனியார்மயம், ஒரே நாடு -ஒரே கல்வி, சமஸ்கிருதம் என ஆதிகால ஏற்றத்தாழ்வுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடாகவே உள்ளது. இதனை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்