கூண்டோடு ராஜினாமா? - திமுகவின் கடைசி ஆயுதம்?

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (13:22 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசை கவிழ்ப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


 

 
தினகரன் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை அடுத்து தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ள எடப்பாடி அரசு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்து விட்டு,  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தை திட்டமிட்டுள்ளது. 
 
சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது தினகரன் தரப்பு. ஏற்கனவே, திமுக தொடர்ந்த வழக்கில் செப்.20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், 21ம் தேதிக்கு பின் வாக்கெடுப்பு நடத்தினால் எடப்பாடி அரசே ஆட்சியில் நீடிக்கும் என்கிற சூழ்நிலை இருக்கிறது. 
 
பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். இன்று மாலை அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பேச உள்ளார். எனவே, எடப்பாடிக்கு ஆதரவாகவே ஆளுநர் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.


 

 
எடப்பாடி அரசை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என திமுக மற்றும் தினகரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தினகரன் ஒரு பக்கம், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் தங்களுக்கு நெருக்கமான எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுகவின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும் பட்சத்தில், தற்போதுள்ள சூழ்நிலையில் வாக்கெடுப்பு நடந்தால் அதில் பழனிச்சாமியே வெற்றி பெறுவார் என்பது திமுகவிற்கு தெரியும். எனவே, கடைசி ஆயுதமாக, அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் மொத்தமாக ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாம். 
 
ஆனால், அப்படி செய்தாலும், ஆட்சி கவிழாது எனவும், எதிர்கட்சி இல்லாமலேயே சட்டசபை செயல்படும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், எத்தனை நாட்கள் எதிர்கட்சியே இல்லாமல் ஆளுங்கட்சி மட்டுமே சட்டமன்றத்தை நடத்தும் என்பது தெரியவில்லை.
 
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் திமுக தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்