நாங்க வேட்பாளரை கடத்தல.. அவரே வந்தார்! – பாமக குற்றச்சாட்டுக்கு திமுக பதில்!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (13:49 IST)
வேலூரில் பாமக வேட்பாளரை திமுகவினர் கடத்த முயன்றதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த குற்றச்சாட்டுக்கு திமுக எம்.எல்.ஏ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பிலும் போட்டியிட பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாமக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் வேலூரில் 24 வட்டத்தின் பாமக வேட்பாளர் ஆர்.டி.பரசுராமனை திமுகவினர் தோல்வி பயம் காரணமாக கடத்தி சென்று மிரட்டியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் “மரியாதைக்குரிய பாமக நிறுவனர் அய்யா மருத்துவர் திரு.ராமதாஸ் அவர்களே வேலூர் மாநகராட்சி 24 வார்டு பாமக வேட்பாளர் திரு பரசுராமன் அவர்களை யாரும் மிரட்டவுமில்லை, கடத்தவுமில்லை.

மாறாக அந்த 24 வார்டில் அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்து எங்களுக்கு சால்வை அணிவித்து திமுகவில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது ஆகவே தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொணாடார்,அது திமுக நிர்வாகிக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்ட காரணத்தை அவரிடம் கூறிவிட்டோம், இதற்கான ஆதாரமும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளர் திமுகவினரால் கடத்தப்பட்டதாக இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்