சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக தேவையில்லாமல் தலையிட வேண்டாம் - நீதிபதி காட்டம்

வெள்ளி, 23 ஜனவரி 2015 (13:31 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக வழக்கறிஞர் தேவையில்லாமல் குறுக்கீடு செய்ய வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீதான மேல் முறையீட்டு விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று 12ஆவது நாளாக நடைபெற்றது.
 

 
அப்போது ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் வருவாய் குறைத்து காண்பிக்கப்பட்டதாகவும், சொத்துக்களின் சந்தை மதிப்பும் தவறாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் வாதிட்டார்.
 
இதனையடுத்து நீண்ட நாட்களாக நடைபெற்ற வழக்கில், 9 மாதங்களில் குற்றப்பத்திரிக்கையை எப்படி தாக்கல் செய்தீர்கள் என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு 150 அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வுகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ததாக பவானிசிங் விளக்கம் அளித்தார்.
 
மேலும் ஜெயலலிதாவின் சொத்து குறித்து முழுமையான ஆவணங்கள் உள்ளதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக வழக்கறிஞர் குமரேசன் குறுக்கிட்டு, தங்களிடம் முழுமையான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
 
அப்போது தேவையில்லாமல் குறுக்கீடு செய்ய வேண்டாம் என நீதிபதி அவரிடம் கூறினார். மேலும் வழக்கை முடிக்க 3 மாதங்களே உள்ளதால் முக்கிய அம்சங்களை மட்டுமே தெரிவிக்குமாறும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்