நான் யாரையும் அடிக்கவே இல்லை -மு.க.ஸ்டாலின் விளக்கம்

வெள்ளி, 3 ஜூலை 2015 (05:40 IST)
சென்னை மெட்ரோ ரயில் பயணத்தின் போது, நான் யாரையும் அடிக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1 ஆம் தேதி அன்று, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.
 
இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 01-07-2015 அன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். 
 
இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணி ஒருவரை தாம் அடித்ததாக கூறுவதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "நான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது, சக பயணியை ஒருபோதும் அடிக்கவில்லை. ரயிலில் மகளிர், கட்சியினர் என பலர் இருந்தனர். அதனால் அந்த வாலிபரை தள்ளி போகச் சொல்லி கையை அசைத்தேன். அப்போது என் கைகள் அவர் கன்னத்தில் பட்டது உண்மைதான். ஆனால், அவரது கன்னத்தில் நான் அறையவில்லை. 
 
மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு நேரில் செல்ல முடியாத ஜெயலலிதா, அதை திசை திருப்பவே இப்படி கூறுகிறார். ஜெயலலிதாவின் அறிக்கை காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளியாகியுள்ளது" என விளக்கம் கொடுத்துள்ளார்.
 
மு.க.ஸ்டாலின் கருத்தை உறுதி செய்வது போல், சம்பந்தப்பட்ட நபரும், தன்னை மு.க.ஸ்டாலின் தாக்கவில்லை என கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்