தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் இடைநீக்கம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (11:21 IST)
அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக்கூறி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 


2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக்கூறி, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், மோகன் ராஜ், பார்த்திபன், சேகர், வெங்கடேசன், மற்றும் தினகரன் ஆகிய 6 பேரை கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
 
அந்த மனுவில், தங்களை இடைநீக்கம் செய்திருப்பதால், தொகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தனர்.
 
இதனால், இந்த இடைநீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு, சபாநாயகருக்கு ஆணையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.


 

 
இதைத் தொடர்ந்து, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைநீக்கம் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கும்படி சபாநாயகர் தனபால், பேரவை செயலர் ஜமாலுதீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
 
இந்த நோட்டீசுக்குப் பதிலளித்த சபாநாயகர் தனபால், அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதாக விளக்கமளித்திருந்தார்.
 
இந்நிலையில், தேமுதிக எம்.எல்.ஏக்கள் மனு மீதான இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கத்தில் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்