அதிமுக - தேமுதிகவினர் இடையே மோதல்: கற்கள் மற்றும் கட்டையால் தாக்குதல்

வியாழன், 26 நவம்பர் 2015 (18:14 IST)
சென்னை ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் அதிமுகவினருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தே.மு.தி.க வினர் கற்கள்  மற்றும்  கட்டையால்  அ.தி.மு.க வினரை தாக்கியதாக கூறப்படுகிறது.


 
 
ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ வெங்கட்ராமன் அப்பகுதி மக்களுக்கு மழையால் சேதமடைந்த குடும்ப அட்டைகளுக்கு நகல்களை வழங்கி கொண்டு இருந்தார் அப்போது ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் சரியாக அமைக்கவில்லை என தேமுதிக மேற்கு மாவட்டச் செயலாளர் காமராஜ் புகார் மனு ஒன்றை கொடுக்க வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது அதிமுகவினருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
இந்த வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்தது. இந்த மோதலில் தே.மு.தி.க  வினர் கற்கள்  மற்றும் கட்டையால்  அ.தி.மு.க  வினரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ததை அடுத்து இருதரப்பினரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இந்த மோதலால் அங்கு 100க்கும்  மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்