விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (11:38 IST)
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.


 
 
தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
முன்னதாக 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஏக்கர்களுக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், சிறு குறு விவசாயிகள் என பிரிக்க கூடாது என அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூட்டுறவு வங்கிகள் கடன் வாங்கியிருக்கும் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மனுதாரர் அய்யாக்கண்ணு இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார். மேலும் தேசிய வங்கிகளில் பெற்றிருக்கும் கடனையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்