நேரடி உணவு மானியம்: உணவுப் பாதுகாப்பை குழி தோண்டி புதைக்கும் ஆபத்தான திட்டம் - ராமதாஸ்

வியாழன், 20 நவம்பர் 2014 (07:17 IST)
நேரடி உணவு மானியம் வழங்கும் திட்டம், பொது விநியோகத் திட்டத்தையும், உணவுப் பாதுகாப்பையும் குழி தோண்டி புதைக்கும் ஆபத்தான திட்டம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இந்திய உணவுக் கழகத்தைச் சீரமைப்பதற்காக பாஜக அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ள பரிந்துரைகள் மிகவும் ஆபத்தானவை. 
 
பொது விநியோகத் திட்டத்தின்படி நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டை தாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தலாம் என்பது அந்தக் குழுவின் முக்கிய அம்சமாகும்.
 
இது பொது விநியோகத் திட்டத்தையும், உணவுப் பாதுகாப்பையும் குழி தோண்டி புதைத்துவிடும் ஆபத்தான திட்டம் ஆகும்.
 
உணவு மானியத்தை நேரடி பயன் மாற்றத் திட்டத்தின் மூலம் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டுவிடும்.
 
அதன்பின் அரசு தரும் மானியத்தைக் கொண்டு வெளிச் சந்தைகளில்தான் உணவு தானியங்களை வாங்க வேண்டியிருக்கும்.
 
இது மக்களுக்கு எவ்வகையிலும் பயன்தராது. உதாரணமாக தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. நேரடி மானியத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அதிகபட்சமாக ஒரு கிலோ அரிசிக்கு ரூ.8 மட்டுமே மானியமாக கிடைக்கும்.
 
இதைக்கொண்டு வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி வாங்கமுடியுமா? என்ற வினாவுக்கு ஆட்சியாளர்கள்தான் விடையளிக்க வேண்டும். 
 
எனவே, நியாய விலைக் கடைகளுக்குப் பதிலாக நேரடி உணவு மானியம் என்பதை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது. இப்போதுள்ள உணவு மானிய முறையே தொடரும் என மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்