அதிமுக தொடர்பான விழாக்களில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தரப்பு ஓரங்கட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்றதையடுத்து, டி.டி.வி. தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பெயர்தான் துணை என்றாலும், அதிமுகவின் அதிராக மையமாகவே அவரே செயல்பட்டு வருகிறார். அவரிடம் ஆலோசித்தே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பணிகளில் செயல்படுவதாக தெரிகிறது. இதனால், தமிழகத்தில் சசிகலாவின் பினாமி ஆட்சி செயல்படுவதாக திமுக போன்ற எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில், அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டம் மற்றும் விழாக்களில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்கள் எதுவும் இடம் பெறுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. அனைத்து போஸ்டர்களிலும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரனின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெறுகிறது.
சமீபத்தில், அதிமுக சார்பில் திருநின்றவூரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை திறக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஒட்டப்பட்டிருந்த எந்த போஸ்டர்களிலும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இடம் பெறவில்லை. எனவே, தினகரன் தரப்பு, அவரை ஓரங்கட்டி வருவதாக எடப்பாடி ஆதரவாளர்கள் கூறிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.