நாமக்கல் சிறுநீரக முறைகேடு: சட்டமன்றத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

Mahendran

வியாழன், 16 அக்டோபர் 2025 (12:50 IST)
நாமக்கலில் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து தமிழக சட்டமன்றத்தில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
 
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் , முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். விசாரணையில், சட்டங்களை தவறாக பயன்படுத்தி மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது உறுதியானதையடுத்து, நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.
 
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 
இதேபோன்ற முறைகேடு புகார் 2017-ஆம் ஆண்டிலேயே வந்தும், முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்