ஜெ.விற்கு நானே உண்மையான வாரிசு - களம் இறங்கும் தீபா

ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (14:18 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நானே உண்மையான வாரிசு என அவரின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் ரத்த சொந்த உறவான தீபாவை, போயஸ் கார்டன் உள்ளே எப்போதும் சசிகலா அனுமதித்தது இல்லை. தீபா பல முறை போயஸ் கார்டன் சென்று, தனது அத்தையை (ஜெயலலிதா) சந்திக்க முயன்றார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. 
 
அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை பார்ப்பதற்காக தீபா அப்பல்லோ சென்றார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.   
 
இறுதியில் ஜெயலலிதா மரணம் அடைந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்த மட்டுமே தீபா அனுமதிக்கப்பட்டார். அதேபோல், அவரின் சகோதரர் தீபக் ஜெ.விற்கு இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
எனது அத்தை உயிரோடு இருக்கும் போது அவரை சந்திக்க என்னை அனுமதிக்கவே இல்லை. தற்போது அவர் இல்லை. இந்த சூழலில் மக்கள் ஏற்றுக் கொண்டால் நான் அரசியலுக்கு வருவேன். அந்த முடிவை அவர்களே எடுக்கட்டும்.
 
சசிகலாவை தனது வரிசாக எனது அத்தை ஏற்றுக் கொண்டதே இல்லை. அப்படி நினைத்திருந்தால் அதை எப்போதே அறிவித்திருப்பார். அவரை அரசியலுக்கு அப்பால்தான் நிறுத்தி வைத்திருந்தார். எனக்கு எல்லா விவரங்களும் தெரியும். நானே எனது அத்தை ஜெயலலிதாவிற்கு உண்மையான வாரிசு.
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க வேண்டும் என அதிமுகவினர் கூறி வருவது துரதிருஷ்டமானது. இந்த விவாகரத்தில் கட்சி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
 
எனது அத்தைக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடந்துள்ளன. அது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது அனைத்தும் பெரும்பாலான கட்சி தொண்டர்களுக்கு தெரியாது. 
 
என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்