'பருப்பு விலை உயர்விற்கு மழையின்மையே காரணம்' - சரத்குமார் புது விளக்கம்

வெள்ளி, 23 அக்டோபர் 2015 (16:15 IST)
விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளை குறை சொல்வதற்கு முன், துவரை உற்பத்திக் குறைவுக்கு போதிய மழையின்மையே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துவரம் பருப்பு விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இந்தியா முழுவதும் உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளாக துவரம் பருப்பு இருக்கிற காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துவரம் பருப்பு விலை உயர்வை காரணம் காட்டி, தமிழக அரசு மீது குற்றம் சொல்வதற்கு தமிழக எதிர் கட்சிகள் முயற்சி செய்கின்றனவே யொழிய உண்மை நிலையை புரிந்து கொள்வதில்லை.
 
இந்தியா முழுவதற்கும் ஆண்டுக்கு 2.25 கோடி டன் பருப்பு தேவை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக 1.75 கோடி டன் தான் உற்பத்தி கிடைத்து வருகிறது. கர்நாடகாவில்  குல்பர்கா, மகாராஷ்டிராவில்  லத்தூர் மற்றும்  குஜராத் ஆகிய இடங்களில் தான் துவரம் பருப்புக்குரிய பயிரான துவரை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் மிகக் குறைவாகவே கிடைக்கிறது.
 
இதில் மிக அதிகம் கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் தான். இந்த துவரை உற்பத்தியை நம்பி ஆயிரக்கணக்கான பருப்பு உற்பத்தி மில்கள் இந்தியா முழுவதும் மழை இல்ல மேற்படி பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் உற்பத்தி மிக மிக பாதிக்கப்பட்டுள்ளது. இனி புதிய துவரை அறுவடை செய்யப்பட்டு டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி மாதங்களில் தான் மில்களுக்கு வரும். அதுவரை இப்போது இருக்கின்ற விலை உயர்வு ஏறத்தாழ நிலையாக இருக்கும் வாய்ப்பு உண்டாகி இருக்கிறது.
 
இறக்குமதி மில்களில் இப்போது கைப்பற்றப்பட்டு வரும் ஸ்டாக்குகளை பதுக்கல் என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் ‘கேரி ஓவர் ஸ்டாக்’ என்பார்கள். அதாவது அடுத்து அறுவடை செய்து துவரை கிடைக்கும் வரை படிப்படியாக சப்ளைக்கு தேவைப்படும் என்ற எண்ணத்தில் சேமித்து வைக்கக் கூடியவையாகும்.
 
முதலில் பர்மா போன்ற நாடுகளில் இருந்து தேவைக்கேற்றவாறு துவரம் பருப்பை இறக்குமதி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சரிவிகிதமான துவரம் பருப்பு சப்ளை கிடைப்பதை மத்திய அரசு கண்காணிக்கலாம்.

மழையின்மையே காரணம்:
 
தமிழக அரசும் ரேசன் கடைகளில் கிலோ ரூ.30க்கு இன்றும் துவரம் பருப்பு விநியோகிக்கிறது. இதை மறந்து விட்டு தமிழக அரசை குறை சொல்கிறார்கள். தீபாவளி பண்டிகை காலத்தை கணக்கில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு தேவையான அளவு கையிருப்பும் வைத்துள்ளது. துவரம் பருப்பு விலை உயர்வு இந்தியா முழுவதிற்கும் பொதுவானது. மேலும் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளை குறை சொல்வதற்கு முன், துவரை உற்பத்திக் குறைவுக்கு போதிய மழையின்மையே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
அதே போன்று கமாடிட்டி ஆன்லைன் வர்த்தகத்திற்கு உடனடியாக மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். முக்கியமாக உணவுப் பொருட்களுக்காவது முதல் கட்டமாக தடைவிதிக்க வேண்டும். ஸ்டாக் இருப்பதாக பொய்யான தகவல்களை தெரிவித்து கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு செய்யப்படும் ஆன்லைன் வர்த்தகத்தாலும், பொருட்களின் விலை உயர்வதற்கான வாய்ப்பு உண்டு. எனவே மத்திய அரசு ஆன்லைன் மொத்த வணிகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்